Enrolment Terms (Tamil)
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 4 July 2023
1. மேலும் ஆரோக்கியமான SG (“திட்டம்”) என்பது சுகாதார அமைச்சின் பல்லாண்டுகால உருமாற்றத் திட்டமாகும். நோயுற்றவர்களைப் பராமரிப்பதற்கு அப்பால், நோய் வராமல் தடுப்பதற்கு முனைப்புடன் முயற்சி எடுக்கும் வகையில் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறையை மாற்றியமைப்பது இத்திட்டத்தின் இலக்கு.
2. இத்திட்டத்திற்குப் பதிவு செய்யும் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் (ஒவ்வொருவரும் “பதிவு செய்தவர்” என்றழைக்கப்படுவர்) நோய்த்தடுப்புப் பராமரிப்பின் உதவியுடன் ஆரோக்கியம் பெறவும், தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் ஆற்றல் அளிப்பது திட்டத்தின் நோக்கம். இதற்காக, சார்புள்ள சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் ஆதரவுடன், பங்குபெறும் அடிப்படைப் பராமரிப்பு மருந்தகத்தில் நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையில் வலுவான உறவு வளர்க்கப்படும். பதிவு செய்தவர்கள் தேவையான வாழ்க்கைமுறை திட்டங்களிலும் நோய்த்தடுப்பு சுகாதாரத் திட்டங்களிலும் பங்குபெற மேம்பட்ட வாய்ப்பும் வழங்கப்படலாம். பதிவு செய்தவர்களின் அனுபவத்தையும் சுகாதாரப் பலன்களையும் மேம்படுத்த, திட்டத்தின் கூறுகள் இடையிடையில் மாற்றப்படலாம்.
3. பதிவு செய்தவர்கள் பின்வரும் விதிமுறைகளுக்கு உட்படவேண்டும் (“பதிவு விதிமுறைகள்”).
விளக்கங்களும் அர்த்தங்களும்
4. உள்ளடக்கம் வேறுவிதமாக இருந்தாலொழிய:
(1) “AIC” என்பது ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்புக் குறிக்கும்.
(2) “குழுமம்” என்பது:
(a) தேசியப் பல்கலைக்கழக சுகாதாரச் செயல்முறை பிரைவெட் லிமிடட்;
(b) தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் பிரைவெட் லிமிடட்; அல்லது
(c) சிங்கப்பூர் சுகாதாரச் சேவைகள் பிரைவெட் லிமிடட்.
(3) “தனியார் மருத்துவர்” or “GP” என்பது மருத்துவப் பதிவுச் சட்டம் 1997ன்கீழ் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தில் பதிவு செய்து, மருத்துவராகப் பணிபுரிய சிங்கப்பூர் மருத்துவ மன்றம் வழங்கிய அனுமதிச் சான்றிதழ் வைத்திருக்கும் மருத்துவரைக் குறிக்கும்.
(4) “மேலும் ஆரோக்கியமான SG மருந்தகம்” என்பது திட்டத்தில் பங்குபெறும் மருந்தகமாக ஹெல்த்ஹப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்தகத்தைக் குறிக்கும்.
(5) “Healthy 365” என்பது சுகாதார மேம்பாட்டு வாரியம் “Healthy 365” எனப் பெயரிட்டுள்ள செயலியைக் குறிக்கும்.
5. முரணான நோக்கம் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய:
(1) உள்ளடக்கத்தின் தேவைக்கேற்ப, ஒருமையில் உள்ள சொற்களில் பன்மையும் பன்மையில் உள்ள சொற்களில் ஒருமையும் உள்ளடங்கும்;
(2) விதிமுறை அல்லது பத்தி தலைப்புகளால் இந்தப் பதிவு விதிமுறைகளின் அர்த்தம் பாதிக்கப்படாது;
(3) “உள்ளடங்கும்” என்று குறிப்பிடும்போது கட்டுப்பாடுகள் இருப்பதாகக் கருதாமல், “முன்கூறப்பட்டவற்றின் பொதுமையில் பாரபட்சம் இல்லாமல் உள்ளடங்கும்” என்றும் “வரம்புகளின்றி உள்ளடங்கும்” என்றும் அர்த்தம் காணப்படவேண்டும்;
(4) எந்தவொரு சட்டத்தையும் குறிப்பிடும்போது அந்தச் சட்டத்தில் இடையிடையில் செய்யப்படும் திருத்தம், மாற்றம் அல்லது மறுவடிவமும் குறிப்பிடப்படுகிறது (வேறு பெயரில் மறுவடிவம் பெறும் சட்டம் உட்பட);
(5) எந்தவொரு சட்டத்தையும் குறிப்பிடும்போது அந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்படும் எந்தவொரு துணைச்சட்டமும் அதில் உள்ளடங்கும்;
(6) ஒரு பாலினத்தைக் குறிப்பிடும்போது மற்ற பாலினங்களின் குறிப்பீடும் அதில் உள்ளடங்கும்; அதோடு
(7) ஒரு நபரைக் குறிப்பிடும்போது எந்தவொரு தனிநபர், நிறுவனம், குறுகிய பொறுப்புள்ள பங்காளித்துவம், பங்காளித்துவம், தொழில் அறநிதி, நிறுவனமாக்கப்படாத சங்கம் அல்லது அரசாங்க அமைப்பும் (தனி சட்டப் பிரதிநிதித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்), அந்நபரின் தனிப்பட்ட பிரதிநிதிகளும் வாரிசுகளும் அதில் உள்ளடங்கும்.
பதிவும் அனுகூலங்களும்
6. இந்தத் திட்டத்தின்கீழ், பதிவு செய்தவர் மேலும் ஆரோக்கியமான SG மருந்தகத்தில் அல்லது பலதுறை மருந்தகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்தப் பதிவு விதிமுறைகளில், பதிவு செய்தவர் பதிவு செய்யும் மேலும் ஆரோக்கியமான SG மருந்தகம் அல்லது பலதுறை மருந்தகம் “மருந்தகம்” என்று குறிப்பிடப்படும். திட்டத்தின்கீழ் பதிவு செய்திருக்கும்போது, பதிவு செய்தவர் தான் சேர விரும்பும் மேலும் ஆரோக்கியமான SG மருந்தகத்தை அல்லது பலதுறை மருந்தகத்தைக் குறிப்பிட வேண்டும். பதிவு செய்தவர் (a) மருந்தகத்தை மாற்ற விண்ணப்பம் செய்து, அந்த விண்ணப்பத்தை சுகாதார அமைச்சு ஏற்கும்வரை, அல்லது (b) பதிவு செய்தவர் தனது மருந்தகத்தை மாற்றவேண்டுமென்று சுகாதார அமைச்சு சொல்லும்வரை (எடுத்துக்காட்டாக மருந்தகம் மூடப்பட்டிருப்பதால்), மேலும் ஆரோக்கியமான SG மருந்தகத்தில் அல்லது பலதுறை மருந்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பார். பதிவு செய்தவர் தனது மருந்தகத்தை மாற்றவேண்டும் என்று சுகாதார அமைச்சு சொல்லும்போது, அவர் சேர விரும்பும் இன்னொரு மேலும் ஆரோக்கியமான SG மருந்தகத்தை அல்லது பலதுறை மருந்தகத்தை சுகாதார அமைச்சிடம் அவர் தெரியப்படுத்த வேண்டும். பதிவு செய்தவர் மற்றொரு மேலும் ஆரோக்கியமான SG மருந்தகத்தில் அல்லது பலதுறை மருந்தகத்இதல் பதிவு செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி அளித்தால், அனுமதி அளிக்கப்பட்ட தேதியிலிருந்து, பதிவு செய்தவர் மற்றொரு மேலும் ஆரோக்கியமான SG மருந்தகத்தில் அல்லது பலதுறை மருந்தகத்தில் பதிவு செய்யப்படுவார்.
7. பதிவு செய்தவர்:
(1) திட்டத்திற்குப் பதிவு செய்த தேதியிலிருந்து மருந்தகத்திற்கு முதல் வருகை அளிக்கும் தேதி வரையிலான காலகட்டத்தில் (இரு தேதிகளும் உள்ளடங்கும்), தனது மருந்தகத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்; அதோடு
(2) மருந்தகத்திற்கு முதல் வருகை அளித்த பிறகு, 2023 அல்லது 2024ஆம் ஆண்டில் பதிவு செய்த ஒருவர், தான் பதிவு செய்த தேதியிலிருந்து அடுத்த நாள்காட்டி ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (இரு தேதிகளும் உள்ளடங்கும்) (“ஆரம்பக் காலகட்டம்”), தனது மருந்தகத்தை அதிகபட்சம் நான்கு முறை மாற்றலாம்; அதோடு
(3) ஆரம்பக் காலகட்டத்திற்குப் பிறகு, ஒரு நாள்காட்டி ஆண்டில் ஒரு முறை மட்டுமே தனது மருந்தகத்தை மாற்றலாம்; அல்லது
(4) மருந்தகத்திற்கு முதல் வருகை அளித்த பிறகு, 2025ஆம் ஆண்டிலிருந்து திட்டத்திற்குப் பதிவு செய்யும் ஒருவர், முதல் வருகை அளித்த தேதியிலிருந்து அதே நாள்காட்டி ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (இரு தேதிகளும் உள்ளடங்கும்), தனது மருந்தகத்தை ஒரு முறை மாற்றலாம்.
8. பதிவு செய்தவருக்குக் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள்:
(1) Healthy 365 திட்டத்தின்கீழ் ‘Healthpoints’ புள்ளிகள்;
(2) அவரது மருத்துவ வரலாறு குறித்து கலந்துபேசி, அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு திட்டம் வகுப்பதற்காக, அவர் தேர்ந்தெடுத்த மருந்தகத்தின் மருத்துவருடன் முழு நிதியுதவிபெறும் மருத்துவ ஆலோசனை. வாழ்க்கைமுறை மாற்றங்களுக்கான திட்டங்கள், வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள், பொருத்தமான தடுப்பூசிகள் பரிந்துரைப்பு ஆகியன இதில் உள்ளடங்கலாம்; அதோடு
(3) சுகாதார அமைச்சின் வாழ்நாளுக்கான பரிசோதனை திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் குடிமக்களுக்கு வழங்கப்படும் பரிசோதனைகளுக்கும், சுகாதார அமைச்சின் தடுப்பூசி மற்றும் குழந்தைப்பருவ வளர்ச்சிப் பரிசோதனை நிதி உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கும் கூடுதல் நிதி உதவிகள்.
(மொத்தமாக, “பதிவு செய்தவருக்கான அனுகூலங்கள்”). பதிவு செய்தவர், பதிவு செய்தவருக்கான அனுகூலங்களின் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அந்த அனுகூலத்தைப் பெறுவார்.
9. பதிவு செய்தவருக்கான அனுகூலங்களும் அவற்றின் நிபந்தனைகளும் சுகாதார அமைச்சின் தனி விருப்பத்தின்பேரில் மாற்றத்திற்கு உட்படலாம்.
தரவுப் பகிர்வும் தனியுரிமை கொள்கையும்
10. திட்டத்தின்கீழ் பதிவு செய்வதன்வழி, பதிவு செய்தவர் தனது தனிப்பட்ட தகவல்களை (ஏதேனும் மருத்துவத் தகவல், நிதி உதவிக்குத் தகுதி பெறுகிறாரா என்பதன் தொடர்பில் நிதித் தகவலிலிருந்து பெறக்கூடிய ஏதேனும் தகவல், பதிவு செய்த தேதிக்கு முன்னதாகச் சேகரிக்கப்பட்ட ஏதேனும் தகவல் உள்ளடங்கும்) (“பதிவு செய்தவரின் தகவல்”) பின்வரும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கிறார்:
(1) அவர் பதிவு செய்த மருந்தகம் மற்றும் அங்கு சேவை வழங்குவோர்;
(2) ஒவ்வொரு குழுமம் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1967ன் பகுதி 6ன்படி குழுமத்துடன் தொடர்பிருப்பதாகக் கருதப்படும் நிறுவனங்கள்;
(3) சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கம்;
(4) திட்டத்திற்கு ஆதரவளிக்கும் ஆணைபெற்ற அமைப்புகள் (“பங்குபெறும் ஆணைபெற்ற அமைப்புகள்”);
(5) திட்டத்திற்கு ஆதரவளிக்கும் சமூகப் பங்காளிகள். துடிப்பான முதுமைக்கால நிலையங்களை நடத்துவோர், சுகாதார அமைச்சின் அடிப்படைப் பராமரிப்பு கட்டமைப்பில் பங்குபெறுவோர், ஒருக்கிணைந்த பராமரிப்பு அமைப்பு ஆகியவை இதில் உள்ளடங்கும்;
(6) தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் சட்டம் 1980ன்கீழ் அல்லது சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் சட்டம் 2020ன்கீழ் உரிமம் பெற்று, பதிவு செய்தவருக்கு சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் வழங்குபவர்; அதோடு
(7) அதிகாரம் அளிக்கப்பட்ட ஊழியர்கள், முகவர்கள் மற்றும் (1) முதல் (6) வரையிலான துணைப் பத்திகளில் எதிலாவது குறிப்பிடப்பட்டுள்ளவரின் பிரதிநிதிகள்,
(மொத்தமாக, “ஒத்துழைப்பு தரும் தரப்புகள்”),
பின்வரும் நோக்கங்களுக்காக:
(A) திட்டத்தின்கீழ் பதிவு செய்தவரின் பதிவைச் சரிபார்த்து செயல்படுத்துதல்;
(B) பரிசீலித்து, சிகிச்சையளித்து, நிர்வகித்து, பதிவு செய்தவரின் பராமரிப்பை ஒருங்கிணைத்தல்;
(C) திட்டத்தைப் பரிசீலித்து, மேம்படுத்தி (திட்டம் சார்ந்த ஆய்வுகள் உட்பட), முன்கூறப்பட்டவற்றின் தொடர்பில் பதிவு செய்தவருடன் தொடர்பு கொள்ளுதல்;
(D) குழுமத்தின், சுகாதார அமைச்சின் அல்லது பங்குபெறும் ஆணைபெற்ற அமைப்பின் திட்டம் சார்ந்த வேறு ஏதேனும் திட்டத்தைப் பரிசீலித்து, மேம்படுத்துதல் (“சார்புள்ள திடட்ம்”);
(E) பதிவு செய்தவர் சார்புள்ள ஏதேனும் திட்டத்திற்குத் தகுதி பெறுகிறாரா என்பதைப் பரிசீலனை செய்தல் மற்றும் அத்தகைய சார்புள்ள திட்டத்தின் தொடர்பில் பதிவு செய்தவருடன் தொடர்பு கொள்ளுதல்;
(F) திட்டத்திற்காக, பதிவு செய்தவரின் தொடர்பில், செலுத்தப்பட்டிருக்கக்கூடிய கட்டணங்களைச் சரிபார்த்தல், செயல்படுத்துதல் மற்றும் தணிக்கை செய்தல். ஒத்துழைப்பு தரும் தரப்புகள் ஒன்றுக்கொன்று செலுத்திய கட்டணங்களும் இதில் உள்ளடங்கும்;
(G) ஒத்துழைப்பு தரும் தரப்புகள் திட்டத்தின் தொடர்பில் தங்களுக்கு இடையில் செய்து கொண்டிருக்கக்கூடிய ஏதாவது ஒப்பந்தத்திற்கு உட்பட்டுச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்த்து தணிக்கை செய்தல்; அதோடு
(H) பதிவு செய்தவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகக் கொள்கைக்கும் திட்டமிடலுக்கும் வழிகாட்டுதல்,
(மொத்தமாக “நோக்கங்கள்”).
11. திட்டத்தின்கீழ் பதிவு செய்வதன்வழி, பதிவு செய்தவர் தனது பதிவு விவரங்களை ஏதாவதொரு ஒத்துழைப்பு தரும் தரப்பு, ஏதாவதொரு காரணத்திற்காக, ஒத்துழைப்பு தரும் மற்றொரு தரப்பிடம் வெளியிடுவதற்கும் ஒப்புதல் அளிக்கிறார்.
12. திட்டத்தின்கீழ் பதிவு செய்வதன்வழி, பதிவு செய்தவர் மேலும் ஆரோக்கியமான SG இணையத்தளத்திலும், ஹெல்த்ஹப் இணையத்தளத்திலும், சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் இணையத்தளத்திலும் இடையிடையில் வெளியிடப்படும் தனியுரிமை கொள்கைகளின் விதிமுறைகளுக்கும் உடன்படுகிறார்.
உத்தரவாதங்களும் பொறுப்புகளும்
13. பதிவு செய்தவர் தான் வழங்கிய பதிவு தகவல்கள் அனைத்தையும் பிரதிநிதிப்பதோடு, அவை சரியாகவும் உண்மையாகவும் இருப்பதாக உத்தரவாதம் தருகிறார். அவர் வழங்கிய பதிவு தகவல் ஏதாவது பொய்யாக இருந்ததால் அவருக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்புக்கோ அல்லது பாதிப்புக்கோ ஒத்துழைப்பு தரும் தரப்புகள் பொறுப்பாகமாட்டா.
14. பதிவு செய்தவர் திட்டத்தில் பங்கேற்கும்போது, சார்புள்ள ஒரு திட்டத்தின் தொடர்பில் அவருடன் தொடர்பு கொள்ளப்படலாம். சார்புள்ள திட்டத்தின்கீழ் பதிவு செய்தவருக்கு விதிக்கப்படக்கூடிய கட்டணங்களுக்கு சுகாதார அமைச்சு பொறுப்பாகாது.
இதர விதிமுறைகள்
15. சுகாதார அமைச்சு, எந்தச் சமயத்திலும், திட்டத்தை அல்லது இந்தப் பதிவு விதிமுறைகளில் எதையேனும், முன்னறிவிப்பின்றி, மாற்றலாம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்.
16. சுகாதார அமைச்சு, எந்தச் சமயத்திலும், பதிவு செய்தவர் திட்டத்தின்கீழ் செய்திருக்கும் பதிவை, முன்னறிவிப்பின்றி எந்தவொரு காரணத்திற்காகவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். காரணங்களில் பின்வருபவையும் உள்ளடங்கும்:
(1) பதிவு செய்தவர் இந்தப் பதிவு விதிமுறைகளை மீறுதல்;
(2) பதிவு செய்தவர் மேற்காணும் விதிமுறை 10 அல்லது 11ன்கீழ் வழங்கிய ஒப்புதலை மீட்டுக்கொள்ளுதல்; மற்றும்/அல்லது
(3) பதிவு செய்தவர் தேசிய சுகாதார மின்பதிவுகளிலிருந்து விலகிக் கொள்ளுதல்.
17. இந்தப் பதிவு விதிமுறைகள் சிங்கப்பூர் குடியரசின் சட்டங்களின்கீழ் நிலைநாட்டப்படும். பதிவு செய்தவர் சிங்கப்பூர் நீதிமன்றங்களின் சட்ட எல்லைக்கு உட்படுகிறார்.
ஒத்துழைப்பு தரும் ஒரு தரப்பு, மேற்காணும் விதிமுறைகள் 10, 11, 13 ஆகியவற்றை, இந்தப் பதிவு விதிமுறைகளில் அங்கம் வகிக்கும் தரப்புக்கு இருக்கும் அதே அதிகாரத்துடன், செயற்படுத்தி சார்ந்திருக்கலாம். முன்கூறப்பட்டவை எதுவாக இருந்தாலும், திட்டமும் இந்தப் பதிவு விதிமுறைகளும், வேறெந்த ஒத்துழைப்பு தரும் தரப்பினரின் அல்லது பதிவு செய்தவரின் ஒப்புதலின்றி சுகாதார அமைச்சால் ரத்து செய்யப்படலாம் அல்லது மாற்றப்படலாம். ஒத்துழைப்பு தரும் தரப்புகள் தவிர, இந்தப் பதிவு விதிமுறைகளில் அங்கம் வகிக்கும் தரப்பாக இல்லாத ஒரு நபருக்கு, ஒப்பந்தங்கள் (மூன்றாம் தரப்பினரின் உரிமைகள்) சட்டம் 2001ன்கீழ் இந்தப் பதிவு விதிமுறைகளைச் செயற்படுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை.